தமிழ்ச் செம்மொழி


1. செந்தமிழ் (செம்மொழியாகிய தமிழ்) எனுஞ்சொல் தமிழில் கிடைத்துள்ள மூலமுதல் நூலான, மூவாயிரம் ஆண்டுப் பழைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.

2. தமிழ் எனுஞ் சொல்லுக்குக் கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுந்த பிங்கல நிகண்டு, 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பொருள் கூறுகிறது.

3. செந்தமிழ் என்பதற்குக் 'கலப்பற்ற தூயதமிழ்' என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி.

4. செந்தமிழ் எனுஞ் சொல் உணர்வு நிலையில் இலக்கண வரம்பை வற்புறுத்துகிறது. செயல் நிலையில் செம்மொழி ஆக்கத்தை வற்புறுத்துகிறது. மதிப்பீட்டு நிலையில், இலக்கணத்தை வற்புறுத்தாவிடில் கிளைமொழிகள் தோன்றிப் புதுமொழிகளாக மாறும் என எச்சரிக்கிறது என்று மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் விளக்குகிறார்.

5. செம்மொழி எனுஞ் சொல்லை, அகநானூற்றின் 349 ஆம் பாடல் 'நடுநிலை தவறாத மொழி' எனும் பொருளில் ஆண்டுள்ளது.

6. தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று தன் தனித்தன்மையைக் காத்து, தன்னை அணைத்து அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து. வாழ்ந்து வளர்ந்துவரும் மொழியாகும். ஆங்கிலம் இலத்தின் மொழிக்குக் கடன்பட்டிருப்பது போலவே தமிழ்மொழியும் சமற்கிருதத்திற்குக் கடன்பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. பொருள் விளக்கத்தைச் சாகவிடாமல் சொற்களைக் கைவிடுவது ஆங்கிலத்திற்கு இயலாது ஆனால், சமற்கிருதச் சொற்களுக்கு ஈடான சொற்செல்வங்களைத் தமிழ் அளவின்றிப் பெற்றுள்ளது. இது, முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவு.

7. தென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி, எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியே ஆம் என்பது உறுதி. இவ்வளவு உயர்வும் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உள்நாட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டு உயர்தனிச் செம்மொழி சமற்கிருதம் எனக் கொண்டாற்போலத் தென்னாட்டு உயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடையதாம். இது, 1887இல், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அப்போதைய தமிழ்த் துறைப் பேராசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய வீ.கோ.சூரிய நாராயண சாத்திரி என்ற பரிதிமாற் கலைஞர் முடிபு.

8. பிறமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் கொண்ட தமிழின் சிறப்பு வியப்பை அளிப்பதாகும். தமிழ், செய்யுள் வடிவிலும் உரைநடையிலும், கிரேக்க மொழிச் செய்யுள்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்பமுடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி நூல்மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது. இது, முனைவர் வின்சுலோ அவர்களின் முடிபு.

9. தமிழ்மொழியைச் செவ்வியல் மொழியாக உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் பழந்தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் இம்முயற்சி, கிரேக்கர்களுடன் தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே ஏற்பட்டுள்ளது. இது, கில்பர்ட்டு சிலேடர் என்ற மொழியறிஞரின் முடிபு.

10. ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள செனல் நாட்டின் தாக்கர் பல்கலைக் கழகம் முதன்முதலில் தமிழ்மொழியைச் செவ்வியல் மொழி என்று முடிவு இயற்றி ஏற்றுக் கொண்டது.

11. தமிழ்நாட்டில், அண்ணர்மலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்க்லைக்கழகம் ஆகியன தமிழைச் செம்மொழி என்று முடிபு இயற்றியுள்ளன.

 

0 comments:

Post a Comment